தொப்பூர் அருகே தொடரும் விபத்து..ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி; காரின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி காரின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதி புதருக்குள் நுழைந்தது
தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற இரண்டு கார்களின் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தெலங்கானாவிலிருந்து கோவைக்கு பிளாக் பவுடர் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி வந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது மோதி, சாலையோரம் புதர் பகுதிக்குள் சென்றது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினர் காரில் வந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பரிதாபமாக உயிரிழந்த செல்வ லீலா
இந்த விபத்தில் காரில் இருந்த சேலம் பகுதியை சேர்ந்த செல்வ லீலா, அவரது தந்தை துரைராஜ் இருவரும் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் படுகாயமடைந்த செல்வ லீலா, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் துரைராஜ் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெறும் விபத்துகள்
மேலும் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடைபெறுகிறது. இந்த விபத்தினை தடுக்க பாலங்கள் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணிகளை வேகப்படுத்தி விரைவில் பாலங்கள் அமைத்து கொடுத்தால் இது போன்ற சாலை விபத்தினை தடுக்க முடியும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள், அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இந்த தொப்பூர் கணவாய் சாலை விரிவாக்க பணி விரைவில் அரசு கையில் எடுத்து முடிக்க வேண்டும் இல்லையென்றால் வாரத்திற்கு இரண்டு முறை ஆவது இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் விபத்தினை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் விபத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தொப்பூர் கணவாய் மிகவும் வளைவு நெளிவுள்ள தாழ்வான வனப்பகுதி இந்தப் பகுதிக்கு வரும்பொழுது ஓட்டுநர்கள் மிகவும் கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் தூக்கம் கலக்கம் காரணமாகவும், தொப்பூர் கணவாய் தாழ்வான பகுதி என்பதாலும் சற்று வேகமாக வரும் பொழுது வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. எவ்வளவு எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது இது போன்ற விபத்துகள் நடந்து விடுகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு உடனடியாக தொப்பூர் சாலை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும். விபத்தில்லா தொப்பூர் கணவாய் என்ற நிலை உருவாக வேண்டும்.