காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக உயர்வு
காவிரி ஆற்றில் இன்று காலை வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு 16வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணைகள் முழுவதுமாக நிரம்பியது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1.65 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 2022-ம் ஆண்டிற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு கடந்தீ காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.60 இலட்சம் கன அடியாக, நீர்வரத்து அதிகரித்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் ஒகேனக்கல் பகுதி முழுவதும் பாறைகள் அருவிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு வெள்ளை காடாய் காட்சியளித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைய தொடங்கியது.
மேலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், நேற்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அணைக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். இதற்காக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு கடுமையாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 41,000 கன அடியாக திறக்கப்பட்டது.
இதனால் நேற்று காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1.45 இலட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 24,000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 16-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசலியக்கவும் மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில அணைகளுக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருப்பதால், நேற்று மாலை நீர்திறப்பு வினாடிக்கு 78,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தற்பொழுது காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை ஆறு மணிக்கு வினாடிக்கு 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்பொழுது 55,000 கனடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கபினி அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்ற நிலையில், மேலும் சில நாட்களுக்கு இந்த வெள்ளப்பெருக்கு தொடர வாய்ப்புள்ளது.