Crime: 5 வயது சிறுமியை அடித்து சூடு போட்ட சித்தப்பா போக்சோவில் கைது
குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயம் மற்றும் சூடு போடப்பட்ட வடு மாதிரி தழும்புகள் இருந்துள்ளது. இதனை சகோதரியிடம் கேட்டபோது உடம்பை சிறுமியே கீரிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தருமபுரி அருகே 5 வயது சிறுமியை அடித்து, துன்புறுத்தி, சூடு போட்டதாக, சித்தப்பா செல்வம் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பனங்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம்-அமுதா தம்பதியினருக்கு மோகன் (15) மற்றும் 5 வயது பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமுதாவின் கணவர் திருப்பூரில் தங்கி பழைய கட்டிடங்கள் உடைக்கும் பணியை மேற்கொள்கிறார்.
மேலும் கணவர் சரியாக குடும்பத்தை கவனிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயாரின் வீடான சின்னபெரம்பனூரில் அமுதா வசித்து வந்துள்ளார். இதில் மகன் மோகன் அக்ரஹாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வரும் நிலையில், சிறுமி இன்னும் பள்ளியில் சேரவில்லை.
இந்நிலையில் அமுதாவின் தாயார் ரேவதி என்பவருக்கு கேன்சர் வந்து சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். தனது தாயாரை சென்னை அழைத்துச் செல்ல கடந்த 01.06.24 அன்று 5 வயது மகளை பாப்பாரப்பட்டியில் உள்ள தனது சகோதரி சங்கீதா என்பவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து தாயாருக்கு சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் கழித்து 20.07.2024 அன்று ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயம் மற்றும் சூடு போடப்பட்ட வடு மாதிரி தழும்புகள் இருந்துள்ளது. இதனை சகோதரியிடம் கேட்டபோது தனது 7 வயது மகன் அடித்ததாகவும், உடம்பை சிறுமியே கீரிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தையினை அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தையை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து பென்னகரம் அரசு மருத்தவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ததில், காயங்கள் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மருத்துவர் மற்றும் பென்னாகரம் காவல் துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குழந்தையை, சித்தப்பா செல்வம்(சங்கீதாவின் கணவர்) என்பவர் அடித்ததாகவும், சூடு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை பென்னகரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலும் மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், செல்வம் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தையை செல்வம் என்பவர் அடித்து துன்புறுத்தியதாகவும், சிறுமி மீது வன்கொடுமை செய்த சித்தப்பா செல்வம் என்பவர் மீது பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.
மேலும் சித்தப்பாவே சிறுமியை அடித்து சித்தரவதை செய்து சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

