அதிகாலை 5 மணிக்கு வந்து அட்னன்ஸ் எடுத்த கலெக்டர்; ஷாக்கான பணியாளர்கள்
அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட உணவு சமையலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நேற்று காலை முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து, வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அரூர் பேரூராட்சியில் அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது தூய்மை பணியை மேற்கொள்ள வந்திருந்த தூய்மை காவலர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, தூய்மை காவலர்கள் பணிக்கு வந்துள்ளனரா, வருகை பதிவேடு எடுத்து ஒவ்வொரு பெயரை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் அட்னன்ஸ் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அக்ரஹாரம் அடுத்த ஏ.வேளாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படும் பள்ளியில் திடீரென நுழைந்து சமையல் கூடத்தினை ஆய்வு செய்தார்.
அப்பொழுது உணவு சமைக்கும் முறைகள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் தரமாக இருக்கின்றனவா என ஆய்வு செய்தார். அப்பொழுது கேஸ் சிலிண்டர் கசிவு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டதா உங்களுக்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது குறித்து தெரியுமா என கேட்டறிந்தார். மேலும் மளிகை பொருட்கள் இருப்பு பதிவேடு பார்வையிட்டு, சமைப்பதற்கு முன்பு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை தூய்மைப்படுத்த வேண்டும், அதனை நன்றாக பார்த்துவிட்டு பூச்சி ஏதேனும் இருக்கிறதா என அறிந்த பிறகு உணவு சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என சமையல்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் அதிகமாக இருந்தால் பூச்சி மற்றும் பூஞ்சைகள் பிடித்து விடும் என அறிவுறுத்தினார். இதனையடுத்து பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து, சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்ததால், உடனடியாக பள்ளி வளாகத்திற்கு சுற்றுச் சூழல் அமைக்க வேண்டும். குறைந்த தூரம் தான் இருக்கிறது, இதற்கு உடனடியாக சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும் பள்ளி வளாகம் பார்ப்பதற்கு நன்றாக இருந்து வருகிறது. ஆனால் யாரோ வைத்த மரங்கள் நமக்கு நிழல் தருகிறது. பள்ளி வளாகம் முழுவதும் மரங்களை நட வேண்டுமென தலைமை ஆசிரியருக்கு, ஆட்சியர்கி.சாந்தி அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளியின் தேவைகள் குறித்து உடனடியாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம், அதனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆவின் போது வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.