காவிரி ஆற்றில் 1400 கனஅடி நீர் திறப்பு; பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1400 கன அடி நீர் திறப்பால், தழிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்துப் போனதால், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் பருவ மழை தொடங்கி, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கேரள மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளான கபினியின் நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் கனமழை எதிரொலியால் நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு அடி வரை, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடியும், கிருஷ்ணராஜ் சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடி என, காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம், இறுதியாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வாந்தது. அதன் பிறகு சுமார் ஆறு மாதமாக காவிரி ஆற்றில், கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அவ்வப்போது காவிரி ஆணையம் அறிவுறுத்திய போது மட்டும் குறைந்த அளவு தண்ணீரை திறந்து வந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருவதால், காவிரி ஆணையம் அறிவுறுத்தாமலேயே கர்நாடகா அணிகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கபினி அணையிலிருந்து நீர் திறப்பு என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.