Coronavirus crisis | ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 18 பேராசிரியர்கள் கொரோனா தொற்றால் மரணம்..!
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்களும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ரிக்வேதத்தில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் இஸ்லாமிய பேராசிரியர் உட்பட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 18 பேராசிரியர்கள் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இது அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலிகார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைத் தலைவர் சதாப் கான், சட்டக்கல்வித் துறைத்தலைவர் ஷக்கில் அகமது ஆகியோரும் இந்த இறந்தவர்கள் பட்டியலில் அடக்கம். இவர்கள் அனைவருமே தற்போது பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளித்துவரும் பேராசிரியர்கள். இதுதவிர பல்கலைக்கழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்பால் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்களும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பேராசிரியர்களின் அடுத்தடுத்து இறப்பால் பல்கலைக்கழக வளாகத்தில் வீரியம் வாய்ந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
#AMU_JNMC sends samples for viral genome sequencing , these are sent in accordance with the ICMR guidelines with a letter of AMU VC @ProfTariqManso1 @DrRPNishank @drharshvardhan @PMOIndia @MoHFW_INDIA @EduMinOfIndia @ICMRDELHI @mygovindia @SanjayDhotreMP @amuaa_chicago @PTI_News pic.twitter.com/WOTJXkFTIN
— Aligarh Muslim University (@AMUofficialPRO) May 9, 2021
இந்தப் பதற்றத்தை அடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாரிக் மன்சூர் பல்கலைக்கழக வளாகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பதை ஆய்வு செய்யக்கோரி இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவரது சகோதரரும் அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”டெல்லியில் இறப்பு எண்ணிக்கை அதிகமுள்ள சிவில் லைன் பகுதியையொட்டிதான் அலிகர் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது. அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இது வீரியம் அதிகமுள்ள வைரஸாகவும் இருக்கக்கூடும் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இதனால் இந்த வளாகத்திலிருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளைப் பரிசோதனைக்காக அனுப்புகிறோம். உடனடியாக தொடர்புடைய துறை நபர்களைக் கொண்டு இந்த மாதிரிகளைப் பரிசோதனை செய்யக் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு ஏற்றது போல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இனிமேலும் மரணம் நிகழாமல் இருக்க உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.