கோவை : வாட்ஸ்-அப் வீடியோ கால் போதும் : வீட்டிலிருந்தே போலீசில் புகார் தெரிவிக்கலாம்
வீட்டிலிருந்தே பொதுமக்கள் 7708100100 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவித்தால், வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தப்படும்.
கோவை மாவட்டத்தில், வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பொதுமக்கள் புகார்கள் குறித்து விசாரணை செய்யும் வசதியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் காவல் நிலையம் சென்று புகார் தெரிவிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில் பொதுமக்கள் சிரமம் இன்றி தங்களது புகார்களை தெரிவிக்க ஏதுவாக, கோவை மாவட்டத்தில் வாட்ஸ் மூலம் புகார் பெற்று வீடியோ காலில் விசாரிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார். இந்த சேவையானது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினம்தோறும் மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை ஒரு மணிநேரம் நடைபெறும். வீட்டிலிருந்தே பொதுமக்கள் 7708100100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-ஆப் மூலம் புகார் தெரிவித்தால், வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பதிவு செய்யலாம். மேலும் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்க இயலாதவர்கள் 7708100100 என்ற எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கூறுகையில், "பொது மக்களின் சிரமங்களை தடுக்கும் வகையிலும் புகார் தெரிவிக்க வரும் நபர்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு இந்த சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே எளிதாக புகாரளிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் ஒரு மணிநேரம் இந்த சேவை நடைபெறும். அப்போது பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் செய்தி மூலம் புகார் தெரிவித்தவர்களுக்கு, டோக்கன் முறையில் நேரடியாக புகார்கள் குறித்து விசாரிக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து அந்த புகார் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு அல்லது அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காகவும், இந்த புகார்கள் மீதான விசாரணையை ஆய்வு செய்யவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியாக பிரிவு தொடங்கப்பட்டு, அதற்காக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்ள முடியாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்கள் வெளியே வராமல் வீட்டிலிருந்தே புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லையெனில் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் புகாரளிக்கலாம். அந்த புகார்களின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வசதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்" என அவர் தெரிவித்தார்.