'கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை விபத்தாக மட்டும் பார்க்கக் கூடாது' - வானதி சீனிவாசன்
”கோவையில் தீபாவளிக்கு முதல் நாள், அதுவும் கோயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழக அரசும், காவல் துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது.”
பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”கோவை, டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று அதிகாலை 4.10 மணியளவில் வந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன. கோவையில் தீபாவளிக்கு முதல் நாள், அதுவும் கோயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழக அரசும், காவல் துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது. கோவை மாநகரம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி அவர்களை கொல்வதற்காக, கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அது தமிழகத்தின் இருண்ட வரலாறு. சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பு கோவையில் வலுவாக இருந்து வந்துள்ளது.
எனவே, கோவையில் அதிகாலையில் நடந்த காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அது ஏதாவது பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல் துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதனை ஒரு விபத்து என்ற கோணத்தில் மட்டும் போலீசார் அணுகிவிடக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இனியொரு பயங்கரவாத சம்பவத்தை தாங்கும் சக்தி கோவைக்கும், தமிழகத்திற்கும் கிடையாது. எனவே அது பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். இன்று விவகாரத்தில், காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கைப்பற்றிய தடயவியல் துறையினர் கார் வெடித்தற்கான காரணங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்