’எல்.முருகனை அமைச்சராக்கி அழகு பார்த்தார் பிரதமர்.. ஆ.ராசா முதல்வர் நாற்காலியில் உட்கார முடியுமா?’ - வானதி சீனிவாசன்
”எல்.முருகனை மாநிலத் தலைவர், மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. ஆ.ராசா எத்தனை ஆண்டுகளானாலும் முதல்வர் நாற்காலியில் உங்களால் உட்கார முடியுமா? இது தான் திமுகவின் சமூக நீதி.”
ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், ”ஆ.ராசா கருத்தில் எங்களுக்கு மாற்று கருத்து உள்ளது. பாஜக தொடர்ச்சியாக திமுக தவறுகள், ஊழல்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து வருகிறது.
தி.க., திமுக ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து இந்து மதத்தை அரசியல் இலாபத்திற்காக இழிவுபடுத்துகிறது.பெரியார் காலத்தில் இருந்து இந்து எதிர்ப்பை கொள்கையாக வைத்து செயல்படுகிறார்கள். இன்று சூழல் மாறியுள்ளது. இந்துக்கள் ஆயிரக்கணக்கான பேர் நின்று திமுகவை எதிர்த்து கேள்வி கேட்போம். தமிழகத்தில் பாஜக எங்கே என எள்ளி நகையாடியவர்கள், பாஜக உள்ளே வந்துவிடுவார்கள் என பயப்படும் அளவிற்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக அரசியல் மேடை பேச்சுகளை பெண்கள் கேட்க முடியாது.
ஆ.ராசா பேச்சு அநாகரீகமானது. தீண்டாமையை எதிர்த்து நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ், பாஜக போராடி வருகிறது. சாதி பார்த்து திமுக வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. சாதி பார்க்காத இயக்கம் பாஜக. இவர்கள் சொல்லும் மனு ஸ்மிருதியை படித்து மக்கள் இயக்கம் நடத்த நாங்கள் வரவில்லை. விளிம்பு நிலையில் உள்ளவர்கலை கைதூக்கி விட்டு வருகிறோம். சாதி கொடுமைகளை நாங்கள் எதிர்க்கிறோம். மூடநம்பிக்கை எதிர்த்து போராடியவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.
எல்.முருகனை மாநிலத் தலைவர், மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. ஆ.ராசா எத்தனை ஆண்டுகளானாலும் முதல்வர் நாற்காலியில் உங்களால் உட்கார முடியுமா? இது தான் திமுகவின் சமூக நீதி. ஆ.ராசா வெளிப்படையாக மதமாற்றத்திற்கு தூண்டுகிறார். இதன் பின்னணியில் எந்த சக்தி உள்ளது? மதமாற்றம் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
திமுக விமர்சித்தால் எங்களது கட்சி தொண்டர்களை கொடூரமாக கைது செய்து திமுக சிறையில் அடைத்துள்ளது. மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. முதல்வர் அறிக்கை விட்டுள்ளார். உங்களை எங்களாலும் சொல்ல முடியும். உங்களை குளிப்பாட்டி எங்கே வைத்தாலும் நீங்கள் மாற போவதில்லை. அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை நசுக்க பார்க்கிறார்கள்.
கோவையில் ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறது. கோவையில் ஒரு சாலையாவது நம்றாக இருக்கிறதா? குப்பை, தண்ணீர் பெரிய பிரச்சனையாக உள்ளது. மேம்பாலங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் உத்தரவு போடுகிறார். ஆனால் திமுகவினர் மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆட்சியரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கோவையை திமுகவிற்கும், முதல்வருக்கும் பட்டா போட்டு கொடுத்துள்ளார்களா? பத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறதா வயிற்றெரிச்சலில் திமுக எந்த பணிகளையும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்