மாணவர்களுக்கு முதலமைச்சரும், நானும் எப்போதும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நிற்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாணவர்களின் வெற்றியே அரசின் வெற்றி. உங்கள் வெற்றி இந்த அரசின் வெற்றி, முதலமைச்சரின் வெற்றி. முதலமைச்சரும், நானும் எப்போதும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நிற்போம்.
கோவை கொடிசியா அரங்கில் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குதல் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “உதயநிதி ஸ்டாலின் காலில் சுளுக்கு இருப்பதால் நடக்க முடியாமல் நடக்கிறார். இவ்வளவு சிரமத்தோடு ஏன் இவ்வளவு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என கேட்ட போது மாணவர் முன்பு நிற்கும் போது உத்வேகம் பெறுகிறேன் எனத் தெரிவித்தார். மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் தரும் திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தினால் 22 இலட்சம் பேர் பயன் பெற்றுள்ளார்.
மாணவ செல்வங்களை நம்பி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். முதலமைச்சர் மற்றும் உதயநிதிக்கு மாணவர்கள் மீது அக்கறைக்கு இந்த திட்டங்கள் தான் எடுத்துக்காட்டு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம், பதட்டம் இல்லாமல் எழுதுங்கள். மாணவர்கள் நன்றாக தேர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறோம். கல்லூரி பற்றி மாணவர்கள் பயப்பட தேவையில்லை. அதுவும் மற்றொரு பள்ளி தான். எல்லோருக்கும் எல்லாம் கொண்டு வருவது தான் திராவிட மாடல் அரசு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற 1800 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. மூன்று தலைமுறைக்கு முன்பு அதிக பள்ளிகளும், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதிக பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான். முதலமைச்சர் கல்விக்கு அடுத்தபடியாக திறன் மேம்பாட்டிற்காக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தை அறிவித்தார். 2022 ல் துவங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் மூலம் 28 இலட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். கல்லூரிகள் மட்டுமின்றி பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று 1800 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் மூலம் 1800 குடும்பங்களில் முதலமைச்சர் ஒளி ஏற்றி வைத்துள்ளார். இது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் துருப்பு சீட்டு. இந்த திட்டத்தினால் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் சாதாரண, ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் நான் முதல்வன் திட்டம் ஒளியேற்றி வைத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 100 பேருக்கு நீங்கள் வேலை தரும் நிலைக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். பொறியியல் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அதை உடைத்து எதை படித்தாலும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒன்றிய அரசு பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 7500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. உங்களது கனவுகளை நனவாக்க நான் முதல்வன் திட்டம் இருக்கிறது. பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சராக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்கி பாடம் நடத்துவதை தவிர்த்து, விளையாட விடுங்கள். மாணவர்களின் வெற்றியே அரசின் வெற்றி. உங்கள் வெற்றி இந்த அரசின் வெற்றி, முதலமைச்சரின் வெற்றி. முதலமைச்சரும், நானும் எப்போதும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நிற்போம்” எனத் தெரிவித்தார்.