கோவை: காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் கைது; 3 ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறிய அவலம்
காதல் ஜோடியை மிரட்டி 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் காரில் விபசாரம் செய்ததாக கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்
கோவை மாவட்டம் சூலூர் அருகே காரில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி 10,000 ரூபாய் பணம் பறித்துச் சென்ற இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் நீலம்பூர் அருகே பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நட்சத்திர ஓட்டல் அருகே கோவை காந்திபுரத்தை சேர்ந்த காதலர்கள் இருவர் தங்கள் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சாதரண உடையில் வந்த இருவர், தங்களை காவலர்கள் எனக் கூறி அந்த காதல் ஜோடியை மிரட்டி 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் காரில் விபசாரம் செய்ததாக கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன காதல் ஜோடி தங்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனை அடுத்து அந்த காதலர்கள் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜிடம் பணம் பறித்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பணம் பறித்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் காதலர்களிடம் பணம் பறித்தவர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக உள்ள ராஜராஜன் மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த காவலர் ஜெகதீஷ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவலர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் ராஜராஜன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ராஜராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக காதல் ஜோடிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். காவல் துறையினரே காதலர்களை மிரட்டி பணம் பறித்து கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்