'உதயநிதி ஸ்டாலினை அவசர கதியில் அமைச்சராக்கியுள்ளனர்’ - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
'ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா முதல்வராக உள்ள போது, அவசர கதியில் அவசர அவசரமாக மகனை அமைச்சராக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினை ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் ஆக்குவதற்கான அவசியம் என்ன?”
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராவது தவறில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா முதல்வராக உள்ள போது, அவசர கதியில் அவசர அவசரமாக மகனை அமைச்சராக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினை ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் ஆக்குவதற்கான அவசியம் என்ன?
கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஸ்டாலினை உடனடியாக அமைச்சராக்கவில்லை. முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக ஸ்டாலின் இருந்த போது, அமைச்சராகவில்லை. 2006 ல் தான் அமைச்சரானார். ஒரே குடும்பத்தை சேர்ந்தவரை ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சராக்கி இருப்பதை அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். அவசர அவசரமாக மகனை அமைச்சராக்கிய காரணத்தை சொல்ல வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் எப்படி செயல்படுகிறார் என்பது பார்ப்போம். ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்வது தமிழ்நாட்டு மக்களை ரொம்ப பாதிக்கிற விஷயம். படம் நடிக்காமல் இருக்கட்டும். அடுத்தவர்கள் தயாரிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் தலையிடமால் சுதந்திரமாக வெளியிட விடுவது தான் திரைத்துறைக்கு அவர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஜெயலலிதா கட்சியை சுயநலத்திற்காக வட்டார கட்சியாக மாற்றிவிட்டனர். மக்கள் பாதிக்கிற அரசாங்கத்தின் வரி விதிப்பு போன்றவற்றை எதிர்த்து போராடாமல் தம் இருப்பை காட்டுவதற்காக பழனிச்சாமி கம்பெனி செயல்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும். இதே நிலை இனியும் தொடர்ந்தால் அதிமுக கட்சி காணாமல் போயிவிடும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியை அமமுக செய்யும். தமிழகத்தை பொறுத்த வரை விடியல் ஆட்சி என்ற பெயரில் விடியா மூஞ்சி ஆட்சி நடக்கிறது. பொதுவாக ஆளுநர் தேவையில்லை என்றாலும், தமிழ்நாட்டில் இது போன்ற ஆட்சிக்கு கடிவாளம் மிக்க கவர்னர் செயல்படுவது சரி தானோ என தோன்றுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்