கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதால், பழங்குடியின மக்கள் பரிதவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 1109 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்திற்குள் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள 18 பழங்குடியின கிராமங்களில் காடர், மலசர், மலை மலசர், முதுவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி வனக்கிராமம் ஆழியாறு அணைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 27 மலை மலசர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் இக்கிராமத்தில் கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல மற்ற வீடுகளும் சேதமடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இரவில் கடும் மழை மற்றும் பனியில் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அப்பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக சின்னார்பதி கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தாலும், அதனை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அச்சத்துடன் வாழ வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பரமசிவம், “சின்னார்பதி மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் வீடுகள் ஒழுகுவதால் இரவு நேரங்களில் உறங்க முடியாமல், குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். பழுதடைந்த வீடுகளில் மக்கள் எத்தனை காலம் தான் வாழ்வார்கள்? வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை. இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டாமல் வனத்துறை அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சின்னார்பதி பழங்குடிகள் மேம்பாட்டு குழு என்ற பெயரில் வனத்துறை பணம் வசூலித்து குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகளுக்காக உடை மாற்றும் அறை கட்டியுள்ளது. ஆனால் அதேபகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருந்தால் பழங்குடியின மக்கள் தாங்களவே இக்கிராமத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்ற எண்ணத்துடன் வனத்துறை செயல்பட்டு வருகிறது. 47 குடும்பங்கள் இருந்த கிராமத்தில் தற்போது, 27 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும். அக்கிராமத்திற்குள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்