திருப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை ; வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் மக்கள் அவதி
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அவிநாசி பகுதியில் 144 மில்லி மீட்டர் மலையும், திருப்பூர் வடக்கு பகுதியில் 167 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெருப்பெரிச்சல் பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாலையிலேயே அங்கு சென்ற மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியிருந்த மழை நீரை துரிதமாக அப்புறப்படுத்தினர்.
இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர், மும்மூர்த்தி நகர், அங்கரிபாளையம் சாலை, வாலிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு சேர்ந்து சாக்கடை நீரும் சென்றது. இதனால் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி நேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்ததோடு மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினர். முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததே அவ்வப்போது மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.