ஈரோட்டில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்தநீர்; வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு
அடுக்குமாடி குடியிருப்பு கீழ்தளங்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வீடுகளுக்குள் சென்றது. இதனால் அங்கு இருந்தவர்கள் அடுக்குமாடி மேல்தளங்களில் தஞ்சம் புகுந்தனர்.
ஈரோட்டில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனிடையே ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஈரோடு நகர்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று நள்ளிரவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த ஓடையின் அருகில் உள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற அடிக்குமாடி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கீழ்தளங்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வீடுகளுக்குள் சென்றது. இதனால் அங்கு இருந்தவர்கள் அடுக்குமாடி மேல்தளங்களில் தஞ்சம் புகுந்தனர். தரைதளத்தில் உள்ளவர்கள் வீடுகளை பூட்டி விட்டு முதல் தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்து இருப்பதால், அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் தொடர்ந்து பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவது தொடர்ந்து வருவதாகவும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஓடையின் நடுவே உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை தூய்மை பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பெருந்துறை, நசியனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் நசியனூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மல்லிநகரில் இதேபோன்று கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.