திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது
திருப்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் - தாராபுரம் சாலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்பவர், தனது மனைவியை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வாடிக்கையாளர் போல அணுகிய சிலர், அவரது வீட்டிற்கு சென்று அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்தனர். பின்னர் சீருடை அணிந்த 3 காவலர்களும் அங்கே வந்து கணவர் பவித்ரனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ரூ.1 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பதட்டத்துடன் சென்ற பெண்ணை நிறுத்தி விசாரித்த போது, காவலர்கள் தனது கணவரை அழைத்துச் சென்றது குறித்து தெரிவித்துள்ளார்.
காவலர்கள் கைது
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பவித்திரன் செல்போன் எண்ணை கொண்டு தேடியதில் அவர் பெருமாநல்லூரில் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர் தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். பின்னர் அவரை மீட்ட காவல் துறையினர் அவருடன் திருச்சியை சேர்ந்த தனபால் சிங், ஈரோட்டை சேர்ந்த முருகன் என்ற மேலும் இரண்டு பேரையும் கடத்தி வைக்கப்பட்டதை கண்டறிந்து, அவர்களையும் மீட்டனர். ஆட்களை கடத்திய வழக்கில் திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் கோபால்ராஜ் (33), சோமசுந்தரம் (33), நீலகிரி சோலூர் மட்டம் காவல் நிலைய காவலர் லட்சுமணன் (32) மற்றும் இவர்களுக்கு உதவி செய்த ஜெயராமன் (20), ஹரீஷ் (25), அருண்குமார் (24) என 6 பேரை நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
விசாரணையில் சோமசுந்தரம், கோபால்ராஜ், லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்ததும், பின்னர் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட போதும் தொடர்ந்து ஒன்றாக பேசி வந்ததாகவும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, இதுபோல கடத்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் மேலும் பலரிடமும் இதுபோல கடத்தி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கடத்தி காவலர்களே பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.