சென்னையைச் சேர்ந்த 3 பேர் கோவையில் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று ரயில்வே தண்டவாளத்தின் அருகே 3 பேரின் உடல் கிடப்பதாக ரெயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தண்டவாளத்தின் அருகே கிடந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குறித்து ரெயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 3 பேரின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அந்த பையை கைப்பற்றி, உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் தனது மகன் யுவராஜ் (16) மகள் ஜனனி (15) ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த சில மாதங்கள் முன்பு வரட்சுமியின் கணவர் விநாயக மூர்த்தி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் வழக்கு கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருக்க முடியாமல் தவித்த வரலட்சுமி கோவிலுக்கு செல்வதாக கூறி, மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து இரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். இரயில் பயணத்தின் போது வரலட்சுமி, யுவராஜ், ஜனனி ஆகியோரின் உடைமைகளை யாரோ திருடியதாகவும், அதனால் கோவை போத்தனூர் பகுதியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்று, வெங்கிட்டாபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். மூன்று பேரும் இரயில் தண்டவாளத்தின் ஓரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக பாசஞ்சர் இரயில் வரும் போது மூன்று பேரும் ஒன்றாக ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் மூன்று பேர் கணவன் காணமல் போனதால் இறந்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கோயம்புத்தூர் இரும்பு பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)