திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (43) மற்றும் அவரது மனைவி திலகவதி (35) ஆகியோர் குழந்தையை கடத்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வடக்கு டோல்கேட் அருகே கடந்த 5 ம் தேதியன்று பெண்கள் குளிக்கும் இடம் கன்னியாகுமரியை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் 1 1/2 வயது ஆண் குழந்தை ஹரிஷ் காணாமல் போனது. குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குழந்தை கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (43) மற்றும் அவரது மனைவி திலகவதி (35) ஆகியோர் குழந்தையை கடத்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் பாண்டியன், திலகவதி ஆகியோர் கோவை ஆலந்துறை பூண்டி சாலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆலந்துறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் பூண்டி முட்டத்துவயல், குளத்தேரி அருகே குளித்துக் கொண்டு இருந்த பாண்டியன், திலகவதி ஆகிய இருவரை ஆலாந்துறை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் குழந்தையை திருடியது ஒப்புக் கொண்டனர். மேலும் அந்த குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் கொடுத்த முகவரியை வைத்து சேலத்தில் பாண்டியனின் தாயார் பச்சையம்மாள் இருந்த ஹரிஷை காவல் துறையினர் மீட்டனர். இதனைத்தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட பாண்டியன் மற்றும் திலகவதி ஆகியோரை ஆலாந்துறை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தில் திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திலகவதியை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த காவல் துறையினர் திலகவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் திலகவதியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிவில் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.