நீலகிரி: சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது - பொதுமக்கள் நிம்மதி!
நீலகிரி மாவட்டம் அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை, வனத்துறை கூண்டில் சிக்கியதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகள் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. அவ்வப்போது வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளுக்கு நுழைவதும், மனித - வன விலங்கு மோதல்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவர் மனைவி, குழந்தை சரிதா (4) ஆகியோருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதியன்று நிஷாந்த் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில், தாயுடன் சிறுமி சரிதா இருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சிறுமி சரிதா சென்றதாக தெரிகிறது.
அப்போது புதர் மறைவில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியை கழுத்தில் தாக்கியுள்ளது. மேலும் சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்றது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சத்தம் போட்டனர். சிறிது தூரத்தில் சிறுமியை கீழே போட்டு விட்டு சிறுத்தை சென்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, கழுத்தில் காயத்துடன் சிறுமி மயக்கம் அடைந்த நிலையில் கிடப்பது தெரிந்தது.
இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி சரிதா உயிரிழந்து விட்டார். இதையடுத்து சம்பவ இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில், சிறுத்தையின் கால் தடம் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை செய்த போது, சம்பவ நடந்த இடத்தில் இருந்து மைனலா காப்புக்காடு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதும், சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, சிறுத்தை தாக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றி சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அரக்காடு பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனிடையே நேற்று மாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. பின்னர் சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் உடல் நல பரிசோதனைக்கு பின்னர், முதுமலை வனப் பகுதியில் சிறுத்தையை விடுவித்தனர். சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டதால், அரக்காடு பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்