’மது அருந்துபோது ஏற்பட்ட பிரச்னையில் மூத்த மகன் அடித்து கொலை’- தந்தை மற்றும் தம்பி கைது...!
மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை தூக்கிச் சென்று, அருகில் உள்ள பாலத்தில் வீசியுள்ளனர். வாகன விபத்தில் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதி பகுதியில் வசித்துவருபவர் கட்டடத் தொழிலாளி கதிர்வேல் (50). இவருக்கு 24 வயதில் செந்தில்குமார் என்ற மகனும், 16 வயதில் இளைய மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை கதிர்வேல் உடன் மகன்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறியது. அப்போது தந்தை கதிர்வேல் மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து செந்தில் குமாரை தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த இருவரும் காவல் துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தாக்குதல் சம்பவத்தை மறைக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி தந்தை மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை தூக்கிச் சென்று, அருகில் உள்ள பாலத்தின் அருகே கொண்டு சென்று வீசி உள்ளனர். வாகன விபத்தில் செந்தில்குமார் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதாக காவல் துறையினருக்கு இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி நகர மேற்கு காவல் துறையினர் செந்தில்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். பின்னர் செந்தில்குமாரின் உடல் கோவை அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் செந்தில்குமார் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பதும், அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது மது போதையில் தந்தை கதிர்வேல் மற்றும் செந்தில்குமாரின் உடன்பிறந்த சகோதரர் இருவரும் சேர்ந்து கம்பியால் செந்தில்குமார் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து விபத்து வழக்கை பொள்ளாச்சி நகர மேற்கு காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் மகனை தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் இளைய மகன் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் தந்தை கதிர்வேல் கோவை மத்திய சிறையிலும், இளைய மகன் உடுமலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.