பரப்புரையை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்; பதிலடி கொடுத்த திருமுருகன் காந்தி
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரப்புரையை தடுத்து பாஜகவினர் ரகளை
கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று இரவு ஒண்டிபுதூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்து வந்தார். மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் திருமுருகன் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த பாஜக கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்டவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பா.ஜ.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம்
இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இது தரப்பினை சேர்ந்தவர்களும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி கொண்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினார். பாரத் மாதா கி ஜே என பாஜகவினரும், ஜெய் பீம், பெரியார் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கங்களுடன் மே 17 இயக்கத்தினரும் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மே 17 இயக்கத்தினர் உரிய அனுமதி பெற்று பரப்புரை மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டுகளை கழட்டுமாறு கூறவே காவல் துறையினருக்கும், மே 17 இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.