கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள்!
இரயில் விபத்து தொடர்பாக தமிழக வனத்துறையினர் பாலக்காடு சென்று இரயில் இயக்கப்பட்ட வேகம் குறித்து ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகியோரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
கோவை போத்தனூர் முதல் கேரள மாநிலம் வரையிலான இரயில் வழித்தடம், தமிழக கேரள எல்லைப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி செல்கிறது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழித்தடம் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வரும் வழித்தடம் என இரண்டு இரயில் பாதைகள் உள்ளன. நேற்றிரவு மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தது. வாளையாறை கடந்து நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதி வேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை அப்புறப்படுத்தியதை அடுத்து அடுத்து, இரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
இந்நிலையில் உயிரிழந்த யானைகளின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றில் இருந்து கரு எடுக்கப்பட்டது. கருவுற்று இருந்த யானை உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதையில் மட்டும் கடந்த 1978ம் ஆண்டு முதல் இதுவரை 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. தமிழக கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்குவதே விபத்திற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் எனவும், யானைகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக தமிழக வனத்துறையினர் பாலக்காடு சென்று இரயில் இயக்கப்பட்ட வேகம் குறித்து ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகியோரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள், சசி, பீட்டர் உட்பட 6 பேரை கேரள ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இரயில்வே காவல் நிலையத்தில் சிறை பிடித்தனர். ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ரயில் இஞ்சினில் இருந்து வேகம் கண்டறியும் கருவியை கழட்டியதாகவும், அதனால் தமிழக வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் மிரட்டியதுடன் காவல் நிலையத்தில் சீருடையுடன் அமர வைக்கப்பட்டனர் வன ஊழியர்கள் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் தமிழக வனத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கோவை வன ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக கேரள மாநில உயர் அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 4 மணி நேரத்திற்கு பின்பு தமிழக வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழக வனத்துறை ஊழியர்கள் சட்ட விரோதமாக கேரள போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்பின் சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மலையாளி சமாஜ் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மலையாளி சமாஜ் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அதிகாரிகளை சிறைபிடித்த கேரள ரயில்வே போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.