கோவையில் கொளுத்தும் கோடை வெயில் - தண்ணீர் தேடி ஊருக்குள் குட்டிகளுடன் உலா வரும் யானை கூட்டம்
வன விலங்களுக்காக அமைக்கப்பட்ட தொட்டி ஒன்றில் தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் தண்ணீர் குடித்து பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு ஆடி அசைந்தபடி வனப் பகுதிக்குள் சென்றன.
கோவை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். வெயில் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் மரம், செடிகள் காய்ந்து காணப்படுகின்றன. மழை இல்லாததால் வனப் பகுதிகளில் ஓடும் சிற்றோடைகள், நீர் வீழ்ச்சிகளும் தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன. இதனால் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதம் கரைக் கீழ் பதி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வன விலங்களுக்காக அமைக்கப்பட்ட தொட்டி ஒன்றில் தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் தண்ணீர் குடித்து பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு ஆடி, அசைந்தபடி வனப் பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதாகவும், இதை தடுக்க வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், நீர் நிரப்ப வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களும், வன உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். வனப் பகுதிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வன விலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை தீர்க்க குட்டைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்