’நதிகளை மீட்டால்தான் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தண்ணீர் பிரச்னை இருக்காது’ - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
”தமிழகத்தில் 85 நதிகள் ஆவணங்களில் இருக்கிறது. ஆனால் சில நதிகள் மட்டுமே ஓடுகின்றது. மற்ற நதிகளை புனரமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது”
கோவை கொடிசியா அருகே தனியார் ஹோட்டலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மனஅழுத்தம், தற்கொலை அதிகரித்து வருகின்றது. 4 பேரில் ஒருவர் மன அழுத்ததில் இருக்கின்றனர். 40 வினாடிக்கு ஒரு தற்கொலை நடைபெறுகின்றது. இதில் இருந்து விடுபட தியானம் அவசியம். தியானத்தில் மதம் இல்லை. அனைத்து மதமும் சம்மதமே. கோவையில் இன்று தியான நிகழ்வில் கலந்து கொள்ளவே வந்துள்ளேன். மாணவர்களுக்கு பரிட்சை, மக்களுக்கு வேலை என ஓவ்வொருவருக்கும் நிறைய டென்ஷன் இருக்கின்றது. இதில் இருந்து விடுதலை பெற தியான நிலை மேற்கொள்வது அவசியம். போதை பொருளுக்கு அடிமையாவது அதிகரித்து வருகின்றது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தியான நிகழ்வுகளை நடத்தினோம்.
தமிழகத்திலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருக்கின்றது. தமிழகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்விற்காக தியான நிகழ்வு நடத்தப்படுகின்றது. ஹைதராபாத் கேரளா போன்ற இடங்களிலும் போதைப் பொருளுக்கு எதிரான நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். நாகநதி திட்டம் சிறப்பாக செயல்படுகின்றது. தமிழகத்தில் 85 நதிகள் ஆவணங்களில் இருக்கிறது. ஆனால் சில நதிகள் மட்டுமே ஓடுகின்றது. மற்ற நதிகளை புனரமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. கோவையில் கௌசிகா நதி, நொய்யல் நதி புனரமைக்க பட வேண்டும். தமிழகத்தில் 85 நதிகளையும் மீட்டால் தமிழகத்தில் சுற்றுசுழல் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்காது. தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரும். பொறியியல் கல்லூரிகளில் கூட தியானம் பாடம் சொல்லி கொடுக்கின்றனர். அமெரிக்காவில் 108 பல்கலைகழகங்களில் தியானம் செய்தால் அதுக்கு மார்க் கிடைக்கும்.
மன அழுத்ததை போக்க முடியாத நிலையிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பான விதிகளை கொண்டு வரவேண்டும். பஞ்சாப், ஹரியானா மாநில பகுதிகளை பார்த்தால் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு போதை பொருளால் இளைஞர்கள் பழகி கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் அதுபோன்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடத்துகின்றோம். போதை பொருளை கட்டுப்படுத்த அரசு பாலிசி வகுத்து அதை முறையாக செயல்படுத்துதல் மூலமும், மக்கள் இவற்றை வெறுப்பதன் மூலமே ஒழிக்க முடியும். இதை அடித்தளத்தில் இருந்து கொண்டு வந்தால் மட்டுமே முடியும்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் சத்சங் நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்து கொண்டு தியானமுறைகளை பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு சொல்லிக் கொடுத்ததுடன், போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியையும் மாணவர்களை எடுக்கச் செய்தார்.