சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார்.
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை
இதனிடையே கடந்த ஆறாம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்கள்ள லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறை கண்காணிப்பாளர் மீது புகார்
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவர்கள் மாவு கட்டு போட பரிந்துரை செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அங்கிருந்து வெளியே அழைத்து வரும்போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். கோவை சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்திருந்த நிலையில் அதன் மீதான விசாரணை இன்று வருகிறது. இதற்காக சிறையில் இருந்து மீண்டும் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.