பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு - சவுக்கு சங்கருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு விசாரணை, கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருவர் மீதான குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் காவல் துறையினர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் 55 பக்க குற்றப்பத்திரிகை நகல் நீதிபதி சரவணபாபு முன்பு வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”இந்த வழக்கு ஒரு குற்றத்திற்காக ஒரு வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் பல வழக்குகளை போட்டு சட்டத்திற்கு முரணாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மீறி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தொடர்ந்து தாக்கல் செய்யக்கூடாது. அதையும் மீறி நடந்துள்ளது சாதாரண வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடையாது.
என்கவுன்டர்கள் அதிகரிப்பு
காவல்துறை மிக மோசமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஒரு போலீஸ் மாநிலமாக மாறி வருகிறது. இந்த வழக்கில் அவசரமாக காவல் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். இதே போலவே அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும். அது தான் நல்லது. அதற்கு 200 முதல் 300 போலீசார் வந்துள்ளார்கள். மக்களின் பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள் இதனை பெரிய வழக்காக்கி தமிழ்நாட்டில் உண்மையான அரசு இயங்குகிறதா? என்கவுண்டர்கள் அதிகமாக உள்ளது. இதில் நியாயம் இருக்கிறதா? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரண்டரான ஒருவரை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு அடுத்த அவரை சுட்டு தள்ளி விட்டீர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்த வழக்கில் சாதாரணமான ஒளிப்பதிவாளர் கைது செய்துள்ளார்கள். மேலும் பல்வேறு கட்சியினர் அவதூறாக பேசி வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறினார்.