தேர்தலில் தனித்து நிற்கும் தைரியம் தி.மு.க.விற்கு உண்டா..? - சவால் விடும் எஸ்.பி. வேலுமணி
நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. அ.தி.மு.க. தான் மிகப்பெரிய கட்சி. தைரியம் இருந்தால் தி.மு.க. தனியாக தேர்தலில் நிற்குமா? அ.தி.மு.க. தனியாக நிற்க தயார் என்று எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”தி.மு.க. அரசு 20 மாதங்களில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும் எதுவும் செய்யவில்லை. எதுவும் செய்யாத கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. கோவை மாவட்டத்தை முழுமையாக தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. தந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் போராட்டங்களை தூண்டி விட்டார். கிராமத்தில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி 3 மாதங்கள் கூட ஆட்சி செய்ய மாட்டார் என்றார்கள். ஆனால் நான்கரை ஆண்டுகள் அற்புதமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
கோவையில் தி.மு.க. அரசு செய்த சாதனை என்ன? இவ்வளவு மோசமான ஆட்சி வேறு யாரும் நடத்தியதில்லை. கருணாநிதி கூட இவ்வளவு மோசமாக ஆட்சி செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியதே ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. மன்னராட்சியின் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். நாட்டு மக்கள் படும் கஷ்டங்களை தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் குடும்பம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது.
தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. பா.ஜ.க.விற்கு அடிமை என தி.மு.க.வினர் கூறுகின்றனர். யார் யாருக்கு அடிமை? நாங்கள் அடிமைகள் அல்ல. நீங்கள் தான் அடிமைகள். தி.மு.க. கூட்டணி கட்சிகள், தி.மு.க. அடிமைகளாக உள்ளனர் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க. ஸ்டாலின் சொல்வதை கேட்கும் அடிமைகளாக உள்ளனர். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. அ.தி.மு.க. தான் மிகப்பெரிய கட்சி. தைரியம் இருந்தால் தி.மு.க. தனியாக தேர்தலில் நிற்குமா? அ.தி.மு.க. தனியாக நிற்க தயார்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவார். தி.மு.க.வினர் கஞ்சா விற்க காவல் துறை உடந்தையாக உள்ளனர். காவல் துறையினர் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கொடி கம்பம் நட வேண்டாம் என அ.தி.மு.கவினரை காவல் துறையினர் மிரட்டுகின்றனர். இந்த வேலையெல்லாம் வைத்து கொள்ளாதீர்கள். கொடி கட்ட கூடாது என ஸ்டாலினிடமோ, செந்தில் பாலாஜியிடமோ, உதயநிதி ஸ்டாலினிடமோ சொல்ல முடியுமா? காவல்துறையினர் நாளை வேலை செய்ய முடியாது.
காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் காலியாவர்கள். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. சொத்து வரி, மின் கட்டணம், பால் விலையை குறைக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வளவு கெட்ட பெயர் வாங்கிய ஒரே ஆட்சி ஸ்டாலின் ஆட்சி தான். தி.மு.க. மீது மக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். வாக்கு பெட்டியில் பிராடு செய்து உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜெயித்தது. இது நாடாளுமன்ற தேர்தலில் நடக்காது. தி.மு.க. இனி எந்த காலத்திலும் வர முடியாது. மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிக்காதீர்கள். மக்களுக்கான திட்டங்களை செய்யுங்கள். அமைச்சர்கள் கொள்ளையடித்து ஸ்டாலின் குடும்பத்திடம் கொடுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தில் எந்த சாலையும் சரியில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த திட்டங்களை எல்லாம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெரிய கட்சி அ.தி.மு.க. தான். அதற்கு அப்புறம் தி.மு.க.வும், மற்ற கட்சிகளும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. தான் ஒரே அ.தி.மு.க. தைரியம் இருந்தால் தி.மு.க. உட்பட கட்சிகள் தனியாக தேர்தலில் நின்றால் இது தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்டர்களும், மக்களும் தயாராக உள்ளனர்.
மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை தந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானால் தான் விடிவு காலம் வருமென மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் முழுமையாக வெல்வோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வருவார். தொழிலாளர்கள், தொழில் முனைவோர் அரசு ஊழியர்கள் என அனைவரும் திமுகவிற்கு வாக்களித்தது தவறு என முடிவு செய்து விட்டார்கள். அதிமுக ஆட்சி மலரும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இவர்கள் செய்யாத திட்டங்களை செய்வார்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டுமென்ற ஆளுநர் கருத்து குறித்த கேள்விக்கு, “அதனை நான் பார்க்கவில்லை. பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்” எனப் பதிலளித்தார்.