கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா அருகே பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் போலீசார் நேற்று பிற்பகல் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த பார்சல்களில் அதிகளவில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வாகனத்தில் இருந்தவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் குறித்து கேட்டபோது, அவர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அந்த நகைகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும், கோவையில் உள்ள நகைக்கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், 6 கிலோ தங்க நகைகள், 8.5 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 10.18 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் மொத்தம் ரூபாய் 30 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.