சினிமா பாணியில் கொள்ளையர்களை சேஸ் செய்து பிடித்த பொள்ளாச்சி போலீசார்...!
வாகன போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி பழனி சாலையில் விடாமல் துரத்தியபடி சினிமா பாணியில் மாருதி காரை காவல் துறையினர் பின் தொடர்ந்து சென்று, சின்னபாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி பகுதியில் மாமரத்துப்பட்டி தென்குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரிடம் நேற்று வாலிபர்கள் சிலர் மிரட்டி அவர் வைத்திருந்த மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இதன் பேரில் காவல் துறையினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர்.
பொள்ளாச்சி வழியாக தப்பிச் செல்வது தெரிந்ததை அடுத்து, கோவை மாவட்ட காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின் படி, ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாருதி கார் ஒன்றை காவல் துறையினர் நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த காரை பின் தொடர்ந்து சென்றனர். காவல் துறையினர் துரத்தி வருவதை தெரிந்ததை அடுத்து, வேகமாக தப்பிச் செல்ல முயன்ற காரை காவல் துறையினர் சேஸ் செய்து சென்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி பழனி சாலையில் விடாமல் துரத்தியபடி சினிமா பாணியில் மாருதி காரை காவல் துறையினர் பின் தொடர்ந்து சென்று, சின்னபாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரில் இருந்த வாலிபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தங்கராஜ்யிடம் கார் மற்றும் 3 பவுன் பறித்த வந்தவர்கள் என்பது உறுதியானது. மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கார் மற்றும் நகை பறிமுதல் செய்த காவல் துறையினர் தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில் பொள்ளாச்சி வந்த தளி காவல் துறையினரிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேர் மீதும் தளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பகுதியில் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று சேஸ் செய்து மடக்கி பிடித்த காவலர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்