பொள்ளாச்சியில் சாலையில் கிடந்த துப்பாக்கி... போலீசிடம் ஒப்படைத்த மூதாட்டி!
சாலையோரம் கருப்பு நிற ‘ரெயின் கோட்’ ஒன்று கிடந்துள்ளதை பார்த்துள்ளார். அதை எடுத்துப் பார்த்த போது, அதில் இரண்டு கையுறைகள் மற்றும் ஒரு நாட்டு கைத் துப்பாக்கி சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பொள்ளாச்சியில் சாலையில் கிடந்த நாட்டு துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 72 வயதான இவர் பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் வசிக்கும் பேத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேத்திக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை பார்ப்பதற்காக நேற்று பொள்ளாச்சிக்கு விஜயலட்சுமி சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி பொள்ளாச்சி - கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் கருப்பு நிற ‘ரெயின் கோட்’ ஒன்று கிடந்துள்ளதை பார்த்துள்ளார். அதை எடுத்துப் பார்த்த போது, அதில் இரண்டு கையுறைகள் மற்றும் ஒரு நாட்டு கைத் துப்பாக்கி சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி தனது பேரன் விஜய்க்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து விஜயலட்சுமி தனது பேரன் விஜய் உடன் வந்து கைத்துப்பாக்கியை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது பேரன் விஜய் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட பகுதி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குள் இருப்பதால் வழக்கு மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவையில் உள்ள ஆயுத கிடங்கில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி நாட்டு ரக துப்பாக்கியாகும். அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கியை கொண்டு வந்தது யார்? என்ன நோக்கத்திற்காக கொண்டு கொண்டு வரப்பட்டது? எதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கி கிடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் துப்பாக்கியை விட்டு சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முக்கியமான சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சாலையோரம் துப்பாக்கி கிடந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்