கோவை அருகே 1.5 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 4 பேர் கைது
கடந்த 3 மாதங்களில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 110 நபர்கள் மீது 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2757.870 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சூலூர் காவல் துறையினர் அப்பநாயக்கன்பட்டி - கலங்கல் சாலையில் உள்ள கலங்கல் சந்திப்பு அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பின்னர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (34) மற்றும் பாரதி (29) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள குடோனில் சுமார் 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சோதனை செய்த காவல் துறையினர் 1200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தென்னரசு (29) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 12 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருக்குமென காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
இதேபோல் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது, 99 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றை பதுக்கி வைத்திருந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில், தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 110 நபர்கள் மீது 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 2757.870 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பதிரி நாராயணன் எச்சரித்துள்ளார்