கோவை கார் வெடிப்பு வழக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்
”கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது”
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த அனைத்து ஜமாத் கூட்டமைப்புகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், “கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஜமாத் கூட்டமைப்புகளும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதுபோன்ற அசாதாரண சூழல்களில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பது குறித்து விளக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களின் விளைவுகள் குறித்து எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டோம். நீண்ட கால அடிப்படையில் மத நல்லிணக்கத்திற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக இதுபோன்ற கூட்டத்தை நடத்துகிறோம். கடந்த மாதம் இரண்டு முறை மத நல்லிணக்க அடிப்படையிலான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இது போன்ற குற்ற செயல்கள் நடப்பதற்கு முன் தகவல் அளிப்பது குறித்து எடுத்துரைத்தோம். அவர்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ”கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று நடந்த ஜமாத் கூட்டமைப்புகளுடனான கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதற்கான வலிமையான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை பொருத்தவரை உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது. மேலும் அந்த பகுதியில் 200 மீட்டர் தொலைவில் காவல் துறை தடுப்பு இருந்ததால் தான் வாகனம் வேறு இடத்தில் வெடித்துள்ளது என தெரியவருகிறது. தீபாவளியை ஒட்டி அதிக பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை எடுத்துக் கொள்வது குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை தற்போது அமைதியான பகுதியாகவே உள்ளது. சூழல்களை கருத்தில் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.