Crime : ஒரே நாளில் 10 திருடர்கள் கைது: 114 சவரன் நகை பறிமுதல் - கோவையில் போலீசார் அதிரடி
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் முக்கிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு 114 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10 பேரை ஒரே நாளில் கைது செய்த காவல் துறையினர் 114 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்யும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் முக்கிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு 114 சவரன் மீட்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயலாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறுமுகை டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையைச் சேர்ந்த ஆகாஷ், லோகநாதன், மனோஜ், பட்டுக்கோட்டை சேர்ந்த ராஜா என்ற ரவிக்கண்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வீடியோ வைரல் ஆன நிலையில், கோவை மற்றும் புதுக்கோட்டை தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து கைது செய்துள்ளோம். இவர்கள் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபர்களாக உள்ளனர். மொத்தம் 5 வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்களிடம் 14.5 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல அண்மையில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 வழக்குகளில் தேடப்பட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த சுரேஷ் (33), தென்காசியை சேர்ந்த சப்ஜெயில் ராஜா (19), தூத்துக்குடியை சேர்ந்த மருதுபாண்டி (27), ஆகிய மூவரையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினர் 72 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். இதே போல கோவில்பாளையம் பகுதியில் 3 வீடுகளில் திருடிய வழக்கில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சாலமன் (20), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (21). ஆகிய இருவரை கைது செய்து 27.5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை புறநகரில் ஒரே நாளில் 114 சவரன் நகை பறிமுதல் செய்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமுகையில் பட்டப்பகலில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்கள், மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் வந்து தங்கும் ரவுடிகளை கண்காணிக்க உட்கோட்டத்திற்கு ஓரு குழு என நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்