Watch Video: பொம்மன், பெல்லியிடம் கொஞ்சி விளையாடும் தருமபுரி குட்டியானை; மீண்டும் கிடைத்த யானை பராமரிப்பு பணிகள்
குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு செய்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அந்த யானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய யானைகளை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்களாக கருதி அன்பையும், அக்கறையும் காட்டி பாகன்கள் வளர்த்து வருகின்றனர். அவர்களில் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி ஆகியோர் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
தாயை பிரிந்து உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெல்லியும் வளர்த்து வந்தனர். ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்ற குட்டி யானைக்கு பொம்மி என பெயரிடப்பட்டு, அந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேருயிரான யானைகள் மீது பேரன்பை கொட்டி இருவரும் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொம்மனும், பெள்ளியும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதனை மையமாக வைத்து பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது.
அதேசமயம் ரகு, பொம்மி ஆகிய யானைகள் வளர்ந்து விட்ட நிலையில், அவற்றை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து பொம்மன், பெல்லி இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆஸ்கர் விருது இப்படம் வென்றதை அடுத்து, மீண்டும் அவர்களிடமே அந்த யானைகளை பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர்.
பாகன் பொம்மன் - பெள்ளியுடன் தருமபுரியிலிருந்து கொண்டுவரப்பட்ட குட்டி யானை!https://t.co/wupaoCzH82 | #TheElephantsWhisperers #Bomman #Bellie #Dharmapuri #Mudumalai #TNForest pic.twitter.com/LlkcRIAmcO
— ABP Nadu (@abpnadu) March 24, 2023
இதனிடையே தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடுபட்டி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இந்த யானையை மீட்ட வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து, வனப்பகுதியில் உள்ள காட்டு யானை கூட்டத்துடன் சேர்ப்பதற்கு முயற்சி செய்தனர். இந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த 17 ம் தேதியன்று அந்த யானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன், பெல்லி ஆகியோரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த யானையை இருவரும் பராமரித்து வருகின்றனர். இருவரிடமும் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானையை கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகளை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்