கனமழை காரணமாக மண் சரிவு ; நீலகிரி மலை இரயில் போக்குவரத்து ரத்து
நேற்றிரவு மலை ரயில் பாதையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழையின் அளவு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் பாதையில், மழை காலங்களில் மண் சரிவுகளால் தடைபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு மலை ரயில் பாதையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும் சாய்ந்தன.
இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிக்காக இருபதிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பு பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.