கோவை கார் வெடிப்பு வழக்கு ; விசாரணையை துவக்கிய என்.ஐ.ஏ
கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. ஆன்லைனில் வெடி மருந்துகளை அப்சர் கான் வாங்கிக் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து, அப்சர்கானை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதனிடையே கைது செய்யபப்ட்ட 5 பேரிடம் காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து 3 நாட்கள் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சம்பவம் நடந்த கோவிலுக்கு அருகே ஜமேசா முபின் ஒரு மாதம் முன்பு வரை வசித்துள்ளார் என்பதும், அப்துல் மஜீத் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வசித்து வாடகைக்கு வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல் துறையினர் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்த போது, பல தகவல்கள் கிடைத்தது.
கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு என்.ஐ.ஏ. எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எஸ்பி ஸ்ரீஜித் இந்த கார் வெடிப்பு சம்பந்தம் தொடர்பாக புகார் அளித்த கோயில் பூசாரி சுந்தரேசனிடம் விவரங்களை கேட்டறிந்தார். என்.ஐ.ஏ விசாரணையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக சில இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்