சீமான் கைது செய்யப்பட உள்ளதாக பரவிய தகவல்.. சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன் என சீமான் பேட்டி
இதுவரை தனக்கு சம்மன் கொடுக்கவில்லை எனவும் கோவைக்கும் இவ்வழக்குக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சீமானை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் கோவை விரைந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் காவல் துறையினர் சம்மன் கொடுக்க உள்ளதாகவும், விசாரணைக்காக கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் நீலகிரியில் பொதுக்கூட்டத்தை முடித்து கோவை திரும்பிய சீமான் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வருகை தந்தார். இதனிடையே சீமான் கைது செய்யப்படலாம் என வதந்தி பரவியதால் நாம் தமிழர் கட்சியினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
அப்போது சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் எனவும், 2011 ல் புனையப்பட்ட இவ்வழக்கில் தான் எதுவும் செய்யவில்லை என அப்பெண்ணே எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு பலமுறை சிறைக்கு சென்றுள்ள சூழலில் கைது செய்யப்பட வேண்டுமென்றால் அங்கு வைத்தே கைது செய்திருக்கலாம்.
ஆனால் இதுவரை அப்படி நடக்காததால் வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் காரணமாக நாடே பரபரப்பாக இருக்கும் நிலையில், தானும் தேர்தல் தொடர்பாக தான் வந்துள்ளதாகவும், தன்னை கைது செய்வதென்றால், நீலகிரியிலேயே காவல்துறை இருந்தது.
அங்கு கைது செய்திருக்கலாம். நாளை மறுதினம் சென்னை சென்று விடுவேன் அங்கு வைத்து கைது செய்யலாம். இதுவரை தனக்கு சம்மன் கொடுக்கவில்லை எனவும் கோவைக்கும் இவ்வழக்குக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார். இதேபோல மிரட்டலுக்காக இவ்வதந்தி பரப்பப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுகிறவன் போல் தெரிகிறதா எனவும், சட்டப்படி எதிர்த்தால் சட்டப்படி சந்திப்பேன் எனவும் அரசியல் என்றால் அரசியல்படி சந்திப்போம்" எனவும் பதிலளித்தார்.
பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 28-ஆம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். சீமான் திருமணம் செய்ததற்கான ஆதாரப் புகைப்படம், அவர் பேசியதற்கான ஆடியோ, வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்கள் போன்றவற்றை அளித்து வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.