India vs Pakistan Innings Highlights: யாருக்கு சாதகம்? முடிவே இல்லாமல் முடிந்த இந்தியா பாகிஸ்தான் மோதல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கனமழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
ஆசிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கனமழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முடிவு எடுக்கப்படாததால் இந்திய அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்க காத்திருந்தது. ஆனால் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன்னதாகவே மழை பெய்யத் துவங்கியது. இதனால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாமல் போனது.
நீண்ட நேரம் காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் உட்பட ரசிகர்களும் நடுவர்களும் போட்டி நடைபெறும் என நினைத்துக்கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் மழை நின்றதால், போட்டியைத் துவக்க இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர். இதனால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். ஆனால் சிறுது நேரத்தில் மழை பெய்ததால், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கப்படாமேலே போய்விட்டது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படி போட்டி நடத்தப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 155 ரன்களும், 30 ஓவர்களில் 203 ரன்களும் 40 ஓவரில் 239 ரன்களும் எடுக்கவேண்டும் என இருந்தது. ஆனால் போட்டி மேற்கொண்டு நடத்தப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி நேபாளத்திற்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, போட்டி துவங்கி 4.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 15 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விக்கெட்டை அடுத்தடுத்த ஓவரில் கைப்பற்றினார் அஃப்ரிடி. அதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து தனது விக்கெட்டை ஹாரிஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் தொடக்கம் முதல் தடுமாறிக்கொண்டு இருந்த சுப்மல் கில் ஹாரிஸ் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி தத்தளித்துக் கொண்டு இருந்த இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டனர். இவர்களது பார்ட்னர்ஷிப் அமையும் வரை இந்திய அணி 66 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்தது.
அதன் பின்னர் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வலுவான நிலைக்கு முன்னேற்றினர். குறிப்பாக இருவரும் மாறி மாறி அரைசதம் கடந்து சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கையில் 80 ரன்களைக் கடந்த நிலையில் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ராஃப் மற்றும் நிஷாம் ஷா தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.