நீலகிரியில் கனமழையால் மண் சரிவு ; மலை ரயில் சேவை ரத்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நீலகிரி பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப் பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 130 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த மலை ரயிலை கடந்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. 150 க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளத்தில் பெரிய, சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. இதன் காரணமாக ஊட்டி மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சென்றது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மலை இரயில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம், குன்னூர் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மண் சரிவு காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் சேவை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் மலை ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஊட்டி - குன்னூர் மலை இரயில் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்