உத்தரவிட்ட உதயநிதி ஸ்டாலின்; ஒரே நாளில் மாணவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு தேவையான வசதிகளை செய்து தர அறிவுறுத்திய நிலையில், ஒரே நாளில் மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கோவையில் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு தேவையான வசதிகளை செய்து தர அறிவுறுத்திய நிலையில், ஒரே நாளில் மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா அரங்கில் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குதல், கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மாலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வருகை வந்தார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் வழங்கப்படக்கூடிய உணவின் தரம் குறித்தும், விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் நேரடியாக மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள் மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு என்ன வசதிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அந்த வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்யாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதி வாசலில் மாணவர்களுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாணவர் விடுதியை சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இரவோடு இரவாக விடுதியின் வெளிப்புற சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டது. அதேபோல மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. சேதமடைந்து இருந்த சுற்றுப்புற சுவர் சீரமைத்து தரப்பட்டுள்ளது. அதேபோல விடுதி முழுவதும் தூய்மை பணிகள், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு இருப்பது விடுதி மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, விடுதியை முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தி தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.