அமைச்சர் சிவசங்கர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் ; பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு!
பணி மாறுதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய முதலமைச்சருக்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக ஓட்டுநர் கண்ணன் தெரிவித்தார்.
![அமைச்சர் சிவசங்கர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் ; பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு! Minister Sivashankar ordered to transfer the driver who requested for him to fall with an infant at his feet in coimbatore TNN அமைச்சர் சிவசங்கர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் ; பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/02345186e95b29e88d6ce56bc39bf3191692253691998188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து பணியிட மாறுதல் கேட்ட ஓட்டுநருக்கு, பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து கழகத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். மேலும் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணியாணை மற்றும் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அப்போது மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். மேடையில் அமைச்சர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கண்ணன் கூறுகையில், ”எனது சொந்த ஊர் தேனி. எனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனது தாய் தந்தையார் தான் பார்த்து கொள்கின்றனர்.
எனது பெற்றோருக்கும் வயது காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால், சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே தனக்கு சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்தேன். அமைச்சர் எனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஓட்டுநர் கண்ணனின் கோரிக்கையை ஏற்று தேனி கிளைக்கு பணியிட மாறுதல் வழங்கி, கோவை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கண்ணனின் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென்ற கண்ணனின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட தேனி கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி மாறுதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய முதலமைச்சருக்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக ஓட்டுநர் கண்ணன் தெரிவித்தார். இந்த உத்தரவு ஓட்டுநர் கண்ணன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)