'பொன்னையன் பைத்தியகாரர் மாதிரி பேசுறார்’ - அமைச்சர் துரை முருகன்
புதியதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி, முனுசாமி ஒரு குவாரி எடுத்திருக்கிறார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நீர்வளத் துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, சாமிநாதன் ஆகியோரும், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கீழ் பவானி கால்வாயில் கான்கீர்ட் தளம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”நேற்று காலையும், மாலையும் முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசினேன். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அட்மிட் ஆனது குறித்து சிறிது நேரம் முன்பு தான் தெரிவித்தார்கள். வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் ஸ்டாலின் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று உலக வங்கியிடம் நிதி பெற்று கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது. விவசாயிகள் இடையே இரு விதமான கருத்துக்கள் இருக்கிறது, ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் இருக்கின்றனர். விவசாயிகளிடம் பேசியிருக்கிறோம். அடுத்து ஒரு முறை அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த முனுசாமிக்கு குவாரி வழங்கப்பட்டதாக பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ”பொன்னையன் பைத்தியகாரர் மாதிரி பேசுறார். அதிமுக முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஒரு முறை சீல் வைத்திருக்கின்றோம். போன மாதம் புதியதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி, முனுசாமி ஒரு குவாரி எடுத்திருக்கிறார். பொன்னையன் முன்பு மாதிரி இல்லை, ஒரு மாதிரி ஆயிட்டார்” என அவர் பதிலளித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ”அதில் உண்மை இல்லை. அரசியல்ல இது மாதிரி சொல்றது வழக்கம் தான்” என அவர் பதிலளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்