Mangaluru Auto Blast: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்; கோவை விடுதியில் போலீஸ் விசாரணை
முகமது ஷாரீக் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள முகமது ஷாரீக், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக செயல்பட்டுள்ளார் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரீக் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது ஷாரிக் ஏற்கனவே கடந்த 2020 ம் ஆண்டு உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானார். முகமது ஷாரிக் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷரிக்கை கர்நாடக மாநில காவல் துறையினர் தேடி வந்தனர். மேலும் ஷாரீக் தமிழ்நாட்டில் கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முகமது ஷாரீக் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அங்கு தங்கியிருந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரனை சந்தித்தாகவும் கூறப்படுகின்றது. சுரேந்தரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி மொபைல் சிம்கார்டு வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ள நிலையில், சுரேந்திரனிடம் உதகை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகமது ஷாரிக்கிற்கும், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மங்களுர் ஆட்டோ வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரீக்கிற்கும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபீனுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா? கோவையில் ஏதாவது சந்திப்பு நடந்ததா என்ற கோணங்களில் கோவை காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். இது குறித்து கர்நாடக மாநில காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள கோவை வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் தங்கி இருந்தது தொடர்பாக, அந்த விடுதிக்குச் சென்ற கோவை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விடுதி உரிமையாளர் காமராஜ் என்பவரை விடுதியை பூட்டி விட்டு விசாரணைக்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்