ஈரோடு : ஆடு, நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது - பொது மக்கள் நிம்மதி..!
பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் இருந்த 13 ஆடுகளை ஒரு சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவர் தோட்டத்திலிருந்த வளர்ப்பு நாயையும் அந்த சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகு வனத் துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப் பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது எனவும், எனவே வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூண்டில் சிக்கிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புதுப்பீர் கடவு பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நாய் மற்றும் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் கால் தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் குப்புசாமி என்பவர் தோட்டத்தில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்தனர். குப்புசாமி என்பவர் வழக்கமாக தோட்டத்து வேலைக்கு செல்லும் போது, சிறுத்தையின் சத்தம் கேட்டு கூண்டு இருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை கூண்டி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமி சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்று வனத்துறையினர் கூண்டில் இருந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்