கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாஅத் நிர்வாகிகள் - ‘பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கமாட்டோம்’ என பேட்டி
"இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மத ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.”
![கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாஅத் நிர்வாகிகள் - ‘பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கமாட்டோம்’ என பேட்டி Jamaat officials who went to the Fort Iswaran temple in coimbatore TNN கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாஅத் நிர்வாகிகள் - ‘பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கமாட்டோம்’ என பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/b474ca45acfa8b8a131f059ad8f658b11667460928903188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு மதத்தினரிடையே சகோதரத்துவத்தை பாராட்டும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் இன்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அர்ச்சகர்கள் கைகூப்பி உள்ளே வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவில் பிரகாரத்தில் உள்ள அலுவலக அறையில் கோவில் செயல் அலுவலகர் பிரபாகர் தலைமையில் அமர்ந்து கலந்துரையாடினர். அவர்கள் அதே பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்பு கோவில் அர்ச்சகர்கள் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பட்டுத் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று தோல் மேல் கை போட்டு சகோதரத்துவம் பாராட்டி கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இணயத்துல்லா கூறும் போது, “மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்தோம். ஏழு தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வசித்து வருகிறோம். இந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலை அண்ணன் தம்பிகளாக அனைத்து மதத்தினரும் பார்த்து வருகிறோம். கார் வெடிப்பு சம்பவத்தை எங்கள் அமைப்புகள் கண்டிக்கிறது. சிறுபான்மை மக்களோடு பெருபான்மை மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம்.
உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களை முன்னெடுக்க உள்ளோம். எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். சிறுவயதிலிருந்து அனைவரும் ஒன்றாக இருந்தது குறித்து எல்லாம் பேசினோம். தேர் திருவிழாவின் போது ஒத்துழைப்பு கொடுத்தது குறித்தும் பேசினோம். இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மத ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஆன்மீகத்தையே பின்பற்றும் எங்களை அமைதியாக வாழ விடுங்கள்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)