Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?
தாயும் தந்தையுமாக இருந்து தன்னை அரசியலில் வழிநடத்துபவர் செந்தில்பாலாஜி என்று ஜோதிமணி பேசியது பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம், கிழக்கு சீமையிலே, சமுத்திரம், திருப்பாச்சி படங்களையெல்லாம் மிஞ்சியது
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் முகாம்களை நடந்த வலியுறுத்தி கடந்த கடந்த 25ஆம் தேதி கரூர் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்து, அங்கேயே இரவு, பகலாக தர்ணா செய்தார் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.
கரூர் எம்.பி ஜோதிமணி - மாவட்ட ஆட்சியர் இடையே வாக்குவாதம்..https://t.co/wupaoCQKa2 | #Jothimani | #karur | #Congress pic.twitter.com/m2EgWikiEJ
— ABP Nadu (@abpnadu) November 25, 2021
கடந்த அதிமுக ஆட்சியில் கலெக்டருடன் பிரச்னை செய்தார் சரி, இப்போது காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக-தான் தமிழகத்தில் ஆளுங்கட்சி. அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு போராட்டத்தை ஜோதிமணி முன்னெடுக்க வேண்டும் ? ஆட்சியரிடமோ அல்லது மாவட்ட அமைச்சரான செந்தில்பாலாஜியிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அதுவே போதுமானதாக இருக்குமே என அவரது கட்சியினரே வாய்விட்டு கேட்கும் அளவுக்கு போய்விட்டது அந்த தர்ணா போராட்டம்.
இந்த போராட்டத்தின் மூலம் அண்ணன் – தங்கையாக பழகிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இடையே பாசத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது ’கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பது மாதிரி பளிச்சென பட்டவர்தமனாக தெரியவந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக கூட்டணி சார்பில் ஜோதிமணியும் கரூரில் நேரடியாக களம் கண்டனர்.
ஆட்சி, அதிகாரம், பண பலம், தனிப்பட்ட செல்வாக்கு என்ற சர்வ வல்லமை படைத்த தம்பிதுரையை ஜோதிமணி வெல்ல அவருக்கு பக்க பலமாக நின்றவர் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அதன்பிறகு நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நின்று பிரச்சாரம் செய்தார் ஜோதிமணி. எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்றனர். ஒரே ஸ்கூட்டரில் இருவரும் பயணம் செய்து கட்சி பணிகளையும் பிரச்சார பணிகளையும் பார்த்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தாயும் தந்தையுமாக இருந்து தன்னை அரசியலில் வழிநடத்துபவர் செந்தில்பாலாஜி என்று குறிப்பிட்டு ஜோதிமணி பேசியது பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம், கிழக்கு சீமையிலே, சமுத்திரம், திருப்பாச்சி என தங்கை சென்டிமெண்ட் படங்களையெல்லாம் மிஞ்சியது.
இப்படி ’உடன்பிறப்பு’ என இருந்த ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி அமைச்சரான பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜோதிமணி திமுகவிற்காக சரிவர பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை திமுகவினர் அடிக்கடி முன் வைக்க, அதுவே பிரச்னைகளுக்கு தூபம் போட்டது.
அதன்பிறகு கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்களிலும் செந்தில்பாலாஜியையும் – ஜோதிமணியையும் ஒன்று சேர்ந்து பார்க்க முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணித்த அந்த ’பாச’ வாகனமான ஸ்கூட்டரையும் எங்கேயும் காணமுடியவில்லை. அதனால், அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் அரசல்புரசலாக தெரிந்தது. ஆனால், அந்த அரசல்புரசல், ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது அதிரடியாக வெளியே தெரிந்தது.
போராட்டத்தை முடித்த நிலையில், ஜோதிமணி போட்ட டிவிட்டர் பதிவில் ‘மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, கே.என்.நேரு, செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், மாவட்ட அமைச்சரும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என கூப்பிட்ட செந்தில்பாலாஜியின் பெயரையும் அவர் நிதானமாக சொல்ல தவிர்த்துவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் @mkstalin, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்@KS_Alagiri ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி pic.twitter.com/L5n3H0d15N
— Jothimani (@jothims) November 26, 2021
ஜோதிமணி போராட்டம் நடத்திய அதே நாளில் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆட்சியர் பிரபு சங்கரோடு பங்கேற்றார். ஆனால், அவர் ஜோதிமணியை சந்திக்கவோ அவரை சமாதானப்படுத்தவோ எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.