கோவைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? - முழு விவரம் இதோ...
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் விடுதிகள் கட்டப்படும், கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு, கோவை மாநகரில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த எழில்மிகு கோவை திட்டம், கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையை உள்ளடக்கிய பகுதியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க 410 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கோவை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை -பை வசதி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
செம்மொழி பூங்கா
கோவையில் செம்மொழி பூங்கா மொத்தம் 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தேவை வசதி மற்ரும் நலன் அடிப்படையில் சிறந்த சுற்றுச்சூழல், கல்பி, ஆராய்ச்சி, பொழுதுபோக்கு ஆகியவற்றிக்கு பயன்படும் வகையில் உலகத் தரத்துடன் ரூ.172.21 கோடியில் அமைக்கப்பட உள்ளது. குறிச்சி வனம், செம்மொழி வனம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க வனங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் மகரந்தப் பூங்கா, நீர்ப்பூங்கா, மலர் பூங்கா, மூலிகைப்பூங்கா, நறுமண பூங்கா, பாறைப்பூங்கா, மூங்கில் பூங்கா, சிறுவர் பூங்கா, மரவனம் ஆகியவைகளும் அமைக்கப்பட உள்ளது. உள் அரங்கம், வெளியரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர வசதிகளுடன் பசுமை கட்டிடங்கள் அமைக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எழில்மிகு கோவை
பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து, தொழிற்பூங்காக்கள், தரமான வீட்டு வசதி ஆகிய வசதிகளுடன் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு, அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை திட்டம் என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் தொட்டங்கள் தயாரிக்கப்படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
மெட்ரோ இரயில்
தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பல்தொழில்களின் இருப்பிடமாகவும், தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டவும் திகழ்கிறது. கோவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பம்
இன்றைய இணைய உலகத்தில் தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம். சமூக நீதி கொள்கையை நிலைநாட்ட தகவல்களையும், வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை -பை சேவைகள் வழங்கப்படும்.
உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள், நிதிநுட்பம், புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட, திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்து கட்டமைப்புகளும் இந்த நகரங்களில் ஏற்படுத்தப்படும். இதேபோல வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.