சூலூர் விமானப் படைத்தளத்தில் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசங்கள்
62 அரங்குகள் அமைக்கப்பட்டு HAL, BHEL உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இந்திய விமான படைத்தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப் படைத்தளத்தில் 'தரங் சக்தி-2024' எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கூட்டு போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்திய, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற ஆகஸ்ட்-14ம் தேதி வரை சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இந்திய விமான படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சியில் ஜெர்மனி ஈடுபடுகிறது. இந்த விமான போர்ப் பயிற்சியில் இந்தியாவின் அதிநவீன போர் விமானங்களான தேஜஸ், Su-30MKI, Mig29K மற்றும் பிற நாடுகளின் கனரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிகழ்வில் இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் typhoon உள்ளிட்ட உயர்ரக போர் விமானங்கள் பங்கேற்ற பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று சூலூர் விமானப்படைத்தளத்தில் துவங்கியுள்ளது. இதில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு HAL, BHEL உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி இந்தக் கண்காட்சியை துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். இன்றும், நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சி பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூலூர் விமான படை தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.