நூல் விலையை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம்
மூலப்பொருளான நூல் தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியின் தலைநகராக விளங்குகிறது. பின்னலாடை ஏற்றுமதி மூலம் மட்டும், ஆண்டுக்கு 26,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியும், உள்நாட்டு உற்பத்தியில் 22,000 கோடி ரூபாய் வர்த்தகம் என ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை ஈட்டித் தருகிறது. இதன் காரணமாக ‘டாலர் சிட்டி’ என திருப்பூர் அழைக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பின்னலாடையில் 60 சதவீத பின்னலாடை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூரில் தயாராகும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூலப்பொருளான நூல் தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் கிலோ நூல் விலை 130 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கிலோ நூல் தற்போது 350 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.
மூலப்பொருளான பருத்தி, நூல் இரண்டையும் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசே பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 116 அமைப்புக்கள் இணைந்து திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருத்தி பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது மற்றும் பதுக்கல் காரணமாக செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாக நூல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி நூல் விலையை உயர்த்துவதை கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், தமிழக அரசு பருத்தி பஞ்சினை நேரடியாக கொள்முதல் செய்து பதுக்கலை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடைபெறுகிறது.
5 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சார்பு நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 100 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது