Marudamalai Temple: மருதமலை, அனுவாவி கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல நிபந்தனை விதிப்பு - காரணம் என்ன..?
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், படிக்கட்டிகளிலும் காட்டு யானைகள் அடிக்கடி தென்படும் நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மருதமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகியவை அமைந்துள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், படிக்கட்டிகளிலும் காட்டு யானைகள் அடிக்கடி தென்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மருதமலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர். இதுதொடர்பாக கோவை வனச்சரகர் அருண்குமார், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தை மாற்ற கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அக்கோவிலுக்கு சென்று வர வனத்துறையினர் படிக்கட்டுகள் மற்றும் சாலைகள் அமைக்க வனத்துறை நிலத்தை குத்தகைக்கு வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் கோவில் படிகட்டுகளை கடந்து யானைகள் தண்ணீர் குடிக்க செல்கின்றன எனவும், மருதமலை அடிவாரத்தில் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கோவில் படிக்கட்டுகள் மற்றும் சாலைகள் வனப்பகுதிக்குள் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், மனித உயிர் சேதங்களை தவிர்க்க நடைபாதை மற்றும் சாலைகளில் செல்லும் நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் அனுமதிக்காமல் கோவில் வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு பலகை வைக்கவும், கண்காணிப்பு ஆட்கள் நியமிக்கவும் அரிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மனித யானை மோதல் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ள பகுதி யானைகளின் முக்கியமான வழித்தடமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் அனுமதிக்க வேண்டுமெனவும், இதுகுறித்து விழிப்புணர்வு பலகை வைக்கவும், கண்காணிப்பு ஆட்கள் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மனித யானை மோதல் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குமார். 32 வயதான இவர் தனது மனைவி கல்பனா (27) மற்றும் 3 வயது மகனுடன் மருதமலை நேற்று மாலை 5 மணியளவில் மருதமலை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க மனைவி மற்றும் மகனுடன் சென்றார். விறகு சேகரித்து விட்டு மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கல்பனா விறகுடன் முன்னால் சென்று கொண்டிருந்தார். குமார் மகனை தூக்கிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை குமாரை பின்புறமாக வந்து தாக்கியது. யானை தாக்கியதில் சிறுவன் தூக்கி எறியப்பட்ட நிலையில், குமாரை யானை மிதித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial